ஊசிகள் ஆசிரியர்:மீரா

 


*தினம் ஒரு புத்தகம்*

நாள்:129

தேதி:2-12-2022

புத்தகம் எண்ணிக்கை:129

புத்தகத்தலைப்பு:   ஊசிகள்

ஆசிரியர்:மீரா

 கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம். 

**ஊசிகள்  என்பது நூலின் தலைப்பு .தவறு செய்பவர்களை  மனசாட்சி  என்னும் ஊசி கொண்டு குத்துவதுபோல  எழுதி உள்ளார் .

 

**மீராவின் ‘ஊசிகள் அன்றைய தமிழகத்தின் அரசியல், சமூக வாழ்க்கையின் சிறுமைகளை அழகியலோடு சாடும் அங்கதப் பாக்களால் ஆனது. புதுக்கவிதை வடிவக் குறும்பாத் தொகுதி இது.

 

**சுயநல அரசியல்

 

பணத்துக்காக, பதவிகளுக்காகக் கட்சிவிட்டுக் கட்சி மாறினர் கீழ்த்தர அரசியல்வாதிகள். இவர்களால் பொதுவாழ்க்கை தரம் தாழ்ந்து போனது. இதைக் குத்திக் காட்டும் ‘வேகம் - ஒரு தரமான எள்ளல் கவிதை.

 

எங்கள் ஊர் எம்.எல்.ஏ

ஏழு மாதத்தில்

எட்டுத் தடவை

கட்சி மாறினார்

மின்னல் வேகம்

என்ன வேகம்? 

இன்னும் எழுபது

கட்சி இருந்தால்

இன்னும் வேகம்

காட்டி இருப்பார்.....

என்ன தேசம்

இந்தத் தேசம்?

 

***போலியான மொழிப்பற்று

 

“ஜாதி வேண்டும் என்று சாஸ்திரி சொல்கிறார். தமிழ்ப் பற்றாளர் ஒருவர் “சாதி வேண்டும் என்று சரியாய்ச் சொல்லும்படி திருத்துகிறார். ‘தமிழ்ப்பற்று என்னும் குறும்பா காட்டும் காட்சி இது.  ‘தமிழ்ப் பற்று எப்படி இருக்கிறது? ‘ஜாதி கூடாது; ஆனாலும் ‘சாதி இருக்கலாம் என்று சொல்கிறது. மொழி, இன ஒற்றுமை பற்றி மேடையில் முழங்குபவன், பிரிவினை வளர்க்கும் சாதிப்பற்றை விடாமல் இறுகப் பிடித்துக் கொண்டிருக்கிறான். எழுத்தை மட்டும் திருத்தினால் போதுமா? செயல் திருந்த வேண்டாமா? ‘பேச்சில் சீர்திருத்தம், செயலில் பிற்போக்கு இந்த இரண்டு நிலைப்பாட்டைச் சுட்டுகிறார். கேலி மொழியால் சுடுகிறார்.

 

**கணக்குப் பார்த்த காதல்

 

தாய்வழி, தந்தைவழி, முன் அறிமுகம் எந்த வகையிலும் உறவினராய் இல்லாத இருவர் கண்டனர். காதல் பிறந்தது, செம்புலப் பெயல் நீர் போல (உழுது பண்படுத்திய நிலத்தில் பெய்த மழைநீர் போல) அன்புடைய நெஞ்சங்கள் தாமாகக் கலந்துவிட்டன. குறுந்தொகை காட்டும் - சங்க காலத்தின் - இயற்கையான காதல் இது. சாதி, சமய, வர்க்க பேதம் பார்க்காத உண்மையான காதல் !

 

மீரா தன் ‘குறும்புத் தொகையில் காட்டும் ‘நவயுகக் காதல்- இக்காலக் காதல் - வேறு வகையானது. இது சாதி, மதம், உறவு முறை எல்லாம் ‘பார்த்து வருகிறது.

 

உனக்கும் எனக்கும்

ஒரே ஊர் -

வாசுதேவ நல்லூர் ...

நீயும் நானும்

ஒரே மதம்...

திருநெல்வேலிச்

சைவப் பிள்ளைமார்

வகுப்பும் கூட,..

உன்றன் தந்தையும்

என்றன் தந்தையும்

சொந்தக் காரர்கள்...

மைத்துனன் மார்கள்.

எனவே

செம்புலப் பெயல்நீர் போல

அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே.

 

இவ்வாறு குத்தலாகச் சமூக இழிநிலைகள் மீது மின்னல் போல் பாய்வதுதான் மீராவின் குறும்பாக்களின் சிறப்பு.

 

**நெஞ்சில் உரத்துடன் ,நேர்மை திறத்துடன் ,துணிவுடன் கவிதைகள் வடித்துள்ளார் .மேயரின் ஊழல் கண்டு கொதித்து எள்ளல் சுவையுடன் எழுதியுள்ள கவிதை .

மேயர் மகன் தோட்டி மகனுக்குக் கூறியது .

 

குப்பா ! குப்பா !

உன்னைப் பெற்ற தந்தைக்கு 

உன்னைத்தானே 

அடிக்கத் தெரியும் 

என்னைப் பெற்ற தந்தைக்கு 

இந்த  ஊரையே  

அடிக்கத் தெரியும் 

இப்போதேனும் ஒப்புகொள்ளேன் 

என்றன்  தந்தை 

தானே பெரியவர் ...

வணக்கத்திற்குரியவர் !

 

** ‘ஊசிகள் என்ற தலைப்பு நூலுக்கு மிகவும் சிறப்பு. புற்றுநோய் போன்ற இந்தச் சமுதாயச் சீர்கேடுகளில் ‘ஊகதிர் ஊசிகள் போல் இவை பாய்ந்து - நோயை அழிக்கும் செயல் புரிகின்றன.

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

        இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.


Post a Comment

0 Comments